மன்னன் பூலித்தேவனும் தளபதி வெண்ணிக்காலாடியும்

புலித்தேவனின் வரலாறு !

 

“நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?

நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே”

என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வீரவாழ்க்கை வாழ்ந்தவன். பாளையக்காரர்களில் கும்மிப்பாடல் தாலாட்டுப்பாடல் என பாட்டுடைத்தலைவனாக இருந்த ஒரு சிலரில் பூலித்தேவனும் ஒருவன். 1715-ல் சித்திரபுத்திரதேவருக்கும், சிவஞான நாச்சியாருக்கும் பிறந்து நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பாளையக்காரனாக மாறினான்.
தனது 35வது வயதிலிருந்து 52 ம் வயது வரை ஆற்காட்டு நவாபு படைகளையும். கும்பினியர்கள் படையையும் எதிர்த்துப் போராடினான்.

1736-ல் மதுரைநாயக்கர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாளையங்கள் திறை செலுத்த மறுத்து தனித்தே செயல்பட ஆரம்பித்தன. மதுரையை வெற்றிகொண்ட ஆற்காட்டு நவாபு முகமது அலி தனது சகோதரன் அப்துல் ரஹீம் என்பவன் தலைமையில் 1751-ம் ஆண்டு 2500 குதிரைப் படைகளையும் 300 காலாட்படைகளையும் 30 ஐரோப்பியர் பட்டாளத்தையும் அனுப்பி பாளையங்களை அடக்கி வரியை பிடுங்கிவர உத்திரவிட்டான். இப்படையை கும்பினியர் தளபதி லெப்டினட் இன்னிசு வழிநடத்திச் சென்றார். இதை அறிந்த பூலித்தேவன் சுற்றுவட்டாரப்பாளைங்களை ஒன்று திரட்டி எதிர்க்கத் தயாரானான். படை கண்டு அடங்கி கப்பம் கட்டுவார்கள் என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு பூலித்தேவனின் படைபலம் கண்டு பின்வாங்கிச் சென்றனர்.
அரசு வரியில்லாமல் வாழமுடியுமா?. அதுவும் கோட்டை கொத்தளங்களும், அந்தப்புர கும்மாளங்களும் இல்லாமல் ஆற்காட்டு நவாப்புக்கும், கும்பினியர்களுக்கும் இருக்க முடியுமா? எனவே ஆற்காட்டு நவாபு நெல்லைச்சீமையில் வரிவசூலிக்க கிழக்கிந்திய கம்பெனிக்கு உரிமை வழங்குவதாக கூறி உதவியை நாடினான். இதனையே பெரும்வாய்பாக கருதி திருச்சியில் முகாமிட்டிருந்த கர்னல் அலெக்சாண்டர் கெரான் 1755-ல் பிப்ரவரி மாதத்தில் பீரங்கிகளுடனும், 2000 சிப்பாய்களுடனும், 500-ஐரோப்பியர்களுடனும் படைநடத்திவந்தான். கர்னல் கெரானுடன் நவாப்பின் அண்ணண் மாபூசுக்கானும், முகமது யூசுப்கானும் (மருதநாயகம்பிள்ளை) இணைந்து வந்தனர். வரும் வழியில் திண்டுக்கல்லுக்கும் மணப்பாறைக்கும் இடையில் இருந்த லக்கநாயக்கன் பாளையத்தை கைப்பற்றி மதுரைக்குள் நுழைந்தான். மதுரை அப்போது சந்தாசாகிப் ஆதரவாளர்களிடமிருந்தது. அவர்களின் எதிர்ப்பின்றியே மதுரையைக் கைப்பற்றி பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி படைகளை நகர்த்தி பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டான்.
அப்போது அங்கு வீரபாண்டிய கட்டபொம்முவின் பாட்டன் பொல்லாப்பாண்டியன் (1736-1760) ஆட்சியிலிருந்தார். பொல்லாப்பாண்டியன் ஒருபகுதி கப்பத்தை கட்டிவிட்டு மீதித்தொகைக்கு பாளையத்தின் கஷ்டத்தை எடுத்துக் கூறினான். கர்னல் கெரான் அதற்கு இணங்காமல் அவனது இருமகன்களையும் பிணைக்கைதியாக பிடித்து வைத்து மீதித்தொகை கிடைத்தவுடன் விடுத்தான். பாஞ்சாலங்குறிச்சி முடிந்தவுடன் நத்தக்கோட்டை பாளையத்தை முற்றுகையிட்டு கப்பத்தை வசூலித்தான். இதனிடையே மபுசூக்கான் பூலித்தேவனின் நெற்கட்டாஞ்செவ்வல் கோட்டையை தாக்கிட படையுடன் புறப்பட்டான். இதை அறிந்த பூலித்தேவன் அபபடையை வழியிலேயே இடைமறித்து தோற்கடித்து விரட்டினார்.
பல பாளையங்களை பிடித்த வேக்த்தில் திரும்பிட நினைத்த கர்னல் கெரானை மபுசூக்கான் பூலித்தேவன் மீது படையெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினான். இதனால் கெரான் நெற்கட்டாஞ்செவ்வல் கோட்டை மீது படையெடுக்கக் கிளம்பினான். எத்தனையோ பாளையங்களை அடக்கிய எமக்கு இது எத்தனை நாளைக்கு என்ற எண்ணத்துடன் தாக்குதலை ஆரம்பித்தான்.
ஆறு பவுன்ட் பீரங்கிகளைக் கொண்டு தாக்கினான். கல்லால் ஆன கோட்டை கர்ஜித்து நின்றது. 4000 படை வீரர்கள் கோட்டையின் பாதுகாப்பிற்காக இருந்தனர். இதனால் விரக்தி அடைந்த கர்னல் கெரான், சமாதான முறையில் பேசிப் பணியவைத்திட துபாசு முதலியார் என்பவரை தூது அனுப்பினான். ஒரு பகுதி கப்பம் கட்டினால் முற்றுகை நீக்கப்படும் என்று தெரிவித்தான். ஆனால் பூலித்தேவன் இதற்கு சம்மதிக்கவில்லை. கெரானின் படைகள் களைத்திருந்ததையும். உணவுநெருக்கடியில் இருந்ததையும் அறிந்து கொண்ட பூலித்தேவன் விற்படை, வேற்படை, வாட்படை, மற்படை என நான்கு வகையிலும் தாக்குதல் தொடுத்து கெரானின் படைகளை சிதறடித்தான். 1755-ல் மே-22-ல் கெரான் நெற்கட்டாஞசெவ்வலிலிருந்து பின்வாங்கினான். பூலித்தேவனின் வெற்றி அவனது புகழை பரப்பியது . மேலும் பலபாளையங்கள் நட்பாகின. நாட்டுபுறப்பாடல்களில் பாட்டுடைத்தலைவனாக மாறினான்.
களக்காட்டில் அதே ஆண்டு யுத்தகளம் மீண்டும் உருவானது. நவாபுவின் திருச்சி பிரதிநியாக இருந்த முடோமியா தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி களக்காட்டுக் கோட்டையை திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மனுக்கு விற்பனை செய்தான். மார்த்தாண்ட வர்மன் அங்கு 2000 படைவீரர்களை நிறுத்திவைத்தான். நவாபுவின் மபுசூக்கான் திடீர்த்தாக்குதல் நடத்தி களக்காடு கோட்டையை கைப்பற்றினான். மபுசூக்கான் மதுரை சென்றிருந்த நேரம் பார்த்து பூலித்தேவனும், மார்த்தாண்ட வர்மனும் இணைந்து களக்காடு கோட்டையை கைப்பற்றினர். கடுங்கோபமுற்ற மாபுசூக்கான் 600 குதிரைப்படைகளுடனும் 1000 சிப்பாய்களுடனும் சிலபாளையக்காரர்களையும் இணைத்துக்கொண்டு கோட்டையைத் தாக்கினான். இப்போரில் பூலித்தேவன் வெற்றிபெற்று களக்காட்டை தக்கவைத்துக் கொண்டான்.
இவ்வெற்றி பூலித்தேவனுக்கு புதுத்தெம்பைக் கொடுத்தது. தனது பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்த எண்ணி திருவில்லிபுத்தூர் கோட்டையை கைப்பற்றத் திட்டமிட்டான். மதுரைக்கும் நெல்லைக்கும் இடையிலே இருப்பதால் இதன் இருப்பு முக்கியமாகப் பட்டது. இக்கோட்டை ஆற்காடு நவாபுவின் தம்பி ரஹீம் மேற்பார்வையில் 3000 சிப்பாய்களுடனும், 30 கும்பினியர்களின் துணைப்படையுடன் பாதுகாப்பாக இருந்தது. நேரம் பார்த்து பல ஆயிரம் காலாட்படையுடனும் 1000 குதிரைப்டையுடனும் தாக்குதலைத் தொடுத்து கோட்டையை கைப்பற்றினான். ரஹீம் விரட்டி அடிக்கப்பட்டான். இந்த வெற்றி கும்பினியர்களையும், நவாப்பையும் வெறுத்த பல பாளையக்காரர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. பூலித்தேவனுக்கோ வெற்றியின் வேகம் அடுத்த இலக்கைத் தேடியது. மாபுசூக்கான் தங்கியிருந்த திருநெல்வேலியைக் கைப்பற்றி மாபுசூக்கானை ஒழித்துவிட திட்டமிட்டான்.
1756-மார்ச் 21. திருநெல்வேலி மீது பூலித்தேவன் படையெடுத்தான். பூலித்தேவனை நெல்லைக்கு அருகாமையில் இருந்த பாளையங்கள் ஆதரிக்கவில்லை. இருந்தாலும் சண்டை தீவிரமாக நடைபெற்றது. பூலித்தேவனிடம் முடோமியா என்ற பட்டாணியத் தளபதி இருந்தான். இவனது வீரமும் சூரத்தனமும் எதிரிகளை நிலைகுலையச் செய்தது. ஆனாலும் போர்க்களத்தில் முடோமியா எதிரிகளால் வெட்டி வீழ்த்தப்பட்டான். பூலித்தேவன் படைகள் சிதறின. பூலித்தேவன் 2000 வீரர்களைப் பறிகொடுத்து நெற்கட்டாஞ்செவ்வலுக்கு திரும்பினான். முடோமியாவின் மரணம் பூலித்தேவனுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியது.
யுத்தக்கள இரத்தம் காயுமுன் காட்சிகள் மாறின. மாபூசுக்கானை சென்னைக்கு திரும்பிட நவாபு உத்திரவிட்டார். மாபூசுக்கான் மறுத்தான். ஆங்கிலேயத் தளபதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனிடையே முகமது யூசுப்கான் நெல்லைப் பாளையங்களை அடக்கி வரிவசூலிக்க பணிக்கப்பட்டான். உள்ளே மோதல் முற்றியது. நேற்றுவரை யுத்தக்களத்தில் வெட்டி வீழ்த்திய பூலித்தேவனிடம் மாபூசுக்கான் அடைக்கலம் பெற்று அவனுக்காக போர்புரியத் துவங்கினான். மாபூசுக்கானை பூலித்தேவன் சிறைபிடித்து வைத்துள்ளதாகவே யூசுப்கான் கருதினான். அத்துடன் பூலித்தேவனை அடக்கிடவும் வரிவசூலித்திடவும் முடிவெடுத்தான்.
1756-மே-6.ல் 1400 குதிரைப்படையுடனும் 18 பவுன்ட் சக்திவாய்ந்த 4 பீரங்கிகளுடனும், திருவிதாங்கூர் மன்னனின் ஆதரவுடன் படைநடத்தி திருவில்லிபுத்தூர் கோட்டையை பூலித்தேவனிடமிருந்து கைப்பற்றினான். ஆகஸ்ட் 10ம் தேதி வந்தியத்தேவனையும். வாண்டையத்தேவனையும் தோற்கடித்து கொல்லங்கோட்டை பாளையத்தைக் கைப்பற்றினான். டிச.1 அன்று கங்கைகொண்டான் என்ற இடத்தில் பூலித்தேவன் படைகளும் யூசுப்கான் படைகளும் மோதிக்கொண்டன. இதில் பூலித்தேவன் தோற்கடிக்கப்பட்டு நெற்கட்டாஞ்செவ்வலுக்கு திரும்பினான். பூலித்தேவன் கோட்டையைப் பிடிப்பது யூசுப்கானின் வீரத்திற்கும் ஆங்கிலேயர்களின் வருவாய்க்கும் அவசியமாகியது. ஆட்களும்.ஆயுதங்களும் திரட்டப்பட்டன.
1759 ஜீலை-யில் கும்பினியர்களின் படைகள் மீண்டும் யூசுப்கான் தலைமையில் புறப்பட்டன. 6400 காலாட்படைகளுடனும். 600 குதிரை வீரர்களுடனும் ஊத்துமலை பாளைத்தைக் கைப்பற்றினான். இவனுடன் திருவிதாங்கூர் மார்த்தாண்ட வர்மனின் படைகளும் இணைந்தன. செப்.23-ல் வடகரை பாளைத்தைக் கைப்பற்றினர். வடகரை தீக்கரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. நவ.6-ல் பூலித்தேவனின் நெற்கட்டாஞ்செவ்வல் கோட்டையை தாக்கினான் யூசுப்கான். அங்கே நிலைகொண்டு வாசுதேவநல்லூர் கோட்டையையும் தாக்கத் துவங்கினான். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பூலித்தேவனின் 3000 சிப்பாய்கள் யூசுப்கானின் படைக்குள் புகுந்து சிதறடித்தனர். திடீர்த்தாக்குதலில் 200 வீரர்களை இழந்து கும்பினியப்படை சிதறுண்டது. பூலித்தேவனுக்கு இதைவிட சேதாரம் அதிகமானாலும் கோட்டை பாதுகாக்கப்பட்டது.
யுத்தம் நிறுத்தப்பட்டு துரோகங்கள் அரங்கேற்றப்பட்டது. நெற்கட்டாஞ்செவ்வலுக்கு அருகில் இருந்த நடுவக்குறிச்சிப் பாளையமும் 2000 வீரர்களும் கும்பினியர்கள் பக்கம் மாறினர். இவர்களின் உதவியுடன் நெற்கட்டாஞ்செவ்வலை சுற்றியுள்ள காடுகளில் கும்பினியர்களின் முகாம்கள் அமைக்கப்பட்டு தாக்குதலுக்குத் தயாராகின. இதை அறிந்த பூலித்தேவனின் படைத்தளபதி   உயர் மள்ளர்  குலத்தைச்சேர்ந்த வெண்ணிக்காலடி கும்பினிய முகாம்களை குலைத்திட நினைத்தான். இரவோடு இரவாக தாக்கி பலவீரர்களை பலிகொண்டு தானும் பலியானான். மாய்ந்துகிடந்த வெண்ணிக்காலடியை மடியிலே கிடத்தி மனம் வெந்தான் பூலித்தேவன். வெண்ணிக்கொடிக்கு வீரக்கல்லில் வல்லயத்தை வைத்தான் பூலித்தேவன். இவன் போரிட்ட இடம் “காலாடிமேடு” என்று அழைக்கப்படுகிறது.
1760-டிசம்பர் மாதம் யூசுப்கான் பூலித்தேவனின் கோட்டையைத் தாக்கினான். நான்கு மாதங்கள் இத்தாக்குதல் நடைபெற்றது. 1761-மே மாதம் வாசுதேவநல்லூர் கோட்டை, நெற்கட்டாஞ்செவ்வல், நல்லூர்கோட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டன. பூலித்தேவன் இராமநாதபுரம் கடலாடிக்கு தப்பிச்சென்றான். வரலாற்றின் தடம் மாறியது. 1764ல் யூசுப்கான் மதுரையில் மறைந்தான். 1766-ல் பூலித்தேவன் கடலாடியிலிருந்து திரும்பி வந்து வாசுதேவநல்லூர் கோட்டையை புதுப்பித்து ஆட்சி செய்தான். இதை அறிந்த ஆங்கிலேயர்கள் 1766-அக்டோபரில் தாக்குதலைத் துவங்கினர். 1767-மே மாதம் வரை இத்தாக்குதல் நீடித்தது.
1766 அக்டோபர் மாதம் கேப்டன் பௌட்சன் தலைமையில் வாசுதேவநல்லூர் கோட்டை தாக்கப்பட்டது. டிசம்பர் மாதம் மேஜர் பிளின்ட் மற்றும் கேப்டன் பெயின்டர் தலைமையில் கொல்லங்கொண்டான் கோட்டை தாக்கப்பட்டது. ஐந்து ஆங்கிலத்தளபதிகளும் ஏராளமான சிப்பாய்களும் இறந்ததால் கும்பினியப்படை பின்வாங்கி நெல்லைக்குச் சென்றது. 1767, ஏப்ரல் 29-ல் கர்னல் டொனால்டு கேம்பெல் பெரும்படையுடன் கொல்லங்கொண்டான் கோட்டையைத் தாக்கி தரைமட்டமாக்கினான். சேத்தூரையும் கைப்பற்றினான். மே 13.ம் தேதி வாசுதேவநல்லூர் கோட்டையினைத் தாக்கினான். ஒரு வார யுத்தத்திற்குப் பிறகு கோட்டை வீழ்ந்தது. பூலித்தேவனும் அவனது வீரர்களும் காட்டிற்குள் தப்பிச்சென்றனர். பின்னர் பூலித்தேவன் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டைக்குச் செல்லும் வழியில் வழிபடச் சென்றபோது தப்பிச்சென்றதாக தகவல் உள்ளது.
பூலித்தேவனின் படையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒண்டிப்பகடை, வெண்ணிகாலாடி போன்ற தளபதிகளின் வீரமும், தியாகமும் எழுச்சி கொள்ளச்செய்யும். பட்டாணிய இனத்தைச் சேர்ந்த முடோமியா மற்றும் நபிகான் கட்டாக் போன்றவர்களும் இருந்து வீரமரணம் எய்துள்ளனர். பூலித்தேவனுடன் இணைந்த மாபூசுக்கான் மாற்று மதமானாலும் மரியாதையுடன் நடத்தப்பட்டான். அவனது வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட்டது. அவனது தொழுகைக்கு பள்ளிவாசல் அமைத்துக் கொடுக்கப்பட்டது.15 ஆண்டுகள் கும்பினியர்களை எதிர்த்து உறுதிகுலையாமல் போரிட்ட வீரனின் மரணத் தடயம் கிடைக்காவிட்டாலும் அவனது உறுதிகுலையாத வாழ்வையும் போர்க்கள வீரத்தையும் வரலாறு பதியவைத்துள்ளது.

 

Advertisements

One thought on “மன்னன் பூலித்தேவனும் தளபதி வெண்ணிக்காலாடியும்

  1. kindly add karivalamvandanallur palvananathaswamy temple , and devendrakulavelalar 10 th manadakappadi on chitiri car festival and avani thabsu , here car festival in managed by our devendraras , this manadakapadi is from ancient period we have chepu pattayam in the govt , now IOB Bank is in our mandakapadi building , kindly contact kuvalaikkanni peoples for the same , this manakapadi is belongs to kuvalaikkanni, chinnaoppanialpuram ,periyaoppanialpuram and karivalam patchery devendraras, this mandakapadi festival was celebrated by both hindu and christian devendrars. For more details may contact Mr.Ponniah ,Marutham TV .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s