பண்டைத் தமிழகத்தில் இந்திர வழிபாடு எஸ். இராமச்சந்திரன்

பண்டைத் தமிழகத்தில் இந்திர வழிபாடு எஸ். இராமச்சந்திரன்

மருத நிலத்தின் தெய்வமாகத் தொல்காப்பியத்தால் குறிப்பிடப்படும் ‘வேந்தன்’ இந்திரனே என்பதற்கு இது குறித்த கருத்துத் தொடர்ச்சியே ஆதாரமாக அமைகிறது. தமிழிலக்கண நூல்களும் நிகண்டுகளும் பள்ளு போன்ற சிற்றிலக்கிய நூல்களும் தொடர்ந்து ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகிற கருத்தே இதற்கு உறுதியான சான்றாகத் திகழ்கிறது. போரில் வீர மரணமடைவோர் இந்திர உலகத்திற்குச் சென்று அமிழ்தம் உண்பர்; போகம் நுகர்வர் என்பன போன்ற நம்பிக்கைகள் மக்களிடையே நிலவின என்பதற்கு ‘இந்திரர் அமிழ்தம்’ (புறம். 182) வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலில், அமரனான ஆய் மன்னனை வரவேற்கும் வகையில் ஆர்ப்பு எழுந்தது (புறம். 241) போன்ற சங்க இலக்கியக் குறிப்புகள் ஆதாரமாக உள்ளன. சொர்க்கபோகம் பற்றிய இந்நம்பிக்கை திருக்குறள் காலத்திலும் தொடர்ந்து நிலவிற்று. திருக்குறள் காமத்துப்பால் புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் (பா. 3) இடம் பெற்றுள்ள, ‘தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிது கொல் தாமரைக் கண்ணானுலகு’ என்ற குறளில் குறிப்பிடப்படும் தாமரைக் கண்ணான் உலகு என்ற தொடருக்கு ‘இந்திரர் உலகு’ என்றே மணக்குடவர் உரை எழுதியுள்ளார். இதுவே பொருத்தமான உரையாகும்.1
‘ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்’ எனக் குலசேகர ஆழ்வாரும் (பெருமாள் திருமொழி: 4:2) ‘அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிரயான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்’ எனத் தொண்டரடிப் பொடியாழ்வாரும் (திருமாலை:2) பாடியுள்ள வரிகளின் மூலம் செல்வ வளத்துக்கும் போக நுகர்ச்சிக்கும் உரியது இந்திரர் உலகமே என்ற நம்பிக்கை பக்தி இலக்கியக் காலகட்டத்திலும் நீடித்து வந்ததெனத் தெரிகிறது. கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நாலடியாரில் (பா.373) ‘அங்கண் விசும்பில் அமரர் தொழப்படும் செங்கண்மால்’ என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. செங்கண்மால் என்பதற்கு இந்திரன் என்றே பழைய உரையாசிரியர் தருமர் பொருள் கூறியுள்ளார். 2 நாலடியாரில் வேறொரு பாடலில் (பா. 346) இந்திரனுடைய செல்வம் ‘சக்கரச் செல்வம்’ எனக் குறிப்பிடப்படுகிறது. சக்கரன் (பாலி மொழியில் சக்கன்) என்பது இந்திரனுடைய பட்டப் பெயராகும். 3

திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் (கி.பி. 13ஆம் நூற்றாண்டு) ‘இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் அந்தமில் இன்பத்து அழிவில் வீடும்’ என்றுதான் தமது உரையைத் தொடங்குகிறார். திருக்குறள் உட்பட்ட நீதி இலக்கியங்கள் பெரும்பாலும் ஜைன சமயச் சார்புடையவையாகும். மனிதராகப் பிறந்து ஐம்புலன்களை வென்று தவம் புரிந்து, பாவ புண்ணியம் என்ற இருமை நிலையிலிருந்து விடுபெறுவதே வீடுபேறு என எண்ணப்பட்டது. அவ்வாறு வீடுபேறு பெற்றவர்களை, புண்ணியச் செயல் (வைதிகக் கண்ணோட்டத்தில் யாகம், ஜைன பெளத்த சமயங்களின் கண்ணோட்டத்தில் தானம்) புரிந்து இந்திர பதவியடைந்தவர்களும் வழிபடுவர் என்பது ஜைன பெளத்த சமயங்களின் கருத்தாகும். இக்கருத்தினைப் பின்பற்றிச் சைவ-வைணவ பக்தி இலக்கியங்களும் இந்திராதி தேவர்கள் தத்தம் சமயக் கடவுளர்க்கு ஏவல் செய்தனர் எனச் சித்திரித்தன. இவ்வகையில் இந்திரனின் அமராவதி நகரும் யக்ஷர்களின் தலைவன் குபேரனின் அளகாபுரியும் செல்வச் செழிப்பின் சின்னங்களாகத் தொடர்ந்து இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு வந்துள்ளன. 4

படைப்புத் தெய்வம் இந்திரன்

செல்வத்தை உருவாக்குதல் என்பது படைத்தல் தொழிலாகச் சங்க இலக்கியங்களில் சித்திரிக்கப்படுகிறது. ‘படைப்புப் பல படைத்துப் பலரோடுண்ணும் உடைப்பெருஞ் செல்வர்’ என்று புறநானூறு (பா. 188) கூறுகிறது. இப்பாடல் மக்கட் செல்வத்தின் முதன்மையை வலியுறுத்தும் பாடலாகும். புணர்ச்சியின் மூலம் படைக்கப்படும் மனித உயிர்கள் மக்கட் செல்வம் எனக் கருதப்பட்டது போன்றே மழைவளத்தால் உருவாகும் பயிர் வளமும் முதன்மையான செல்வமாகக் கருதப்பட்டது. 5 நிலம் பெண்ணுடலுடன் ஒப்பிடப்பட்டதால் மழைக் கடவுளான இந்திரன் நிலமகளுடன் புணர்ந்து பயிர்களைப் படைப்பதாக நம்பப்பட்டது. இந்நம்பிக்கையின் அடிப்படையில் இந்திரனே உலகைப் படைத்ததாக ரிக்வேதம் குறிப்பிடுகிறது. படைப்பாற்றல் உடைய தெய்வங்களைப் பிரஜாபதிகள் எனப் புராணங்கள் குறிப்பிடும். பெளத்த சமயம், இந்திரனை ‘மகா பிரஜாபதி’ எனக் குறிப்பிடுகிறது. 6

மழையைப் பயன்படுத்தி நேரடியாக விதைத்துப் பயிர் செய்து வாழ்ந்த வானமாரி (மானவாரி) விவசாய வாழ்நிலையே புதிய கற்கருவிப் பயன்பாட்டுப் பண்பாட்டு நிலையெனத் தொல்லியலாளர்களால் குறிப்பிடப்படுகிறது. களைக்கொட்டு விவசாயமே அக்கால கட்டத்தில் முதன்மையான படைப்புத் தொழிலாகக் கருதப்பட்டது. இப்பண்பாட்டு நிலைச் சமூகத்தின் தலைமைப் பதவியை வகித்தவன் இந்திரனாகக் கருதப்பட்டதால் அவனுடைய தொழிலே படைப்புத் தொழிலாகக் கருதப்பட்டது. வேட்டை நிலை போன்ற வேறுபட்ட பண்பாட்டு நிலைச் சமூகங்களுடன் போர்களோ பூசல்களோ ஏற்படும்போது தனது குழுவை வழிநடத்திப் போர் செய்கிற ஆற்றலும் தனது குழுவை இயற்கை இடர்களிலிருந்தும் விலங்குகளின் தாக்குதலிலிருந்தும் காக்கிற – காத்தல் தொழிலுக்குரிய – தகுதியும் உடையவனே வேந்தனாக – காவலனாகக் கருதப்பட்டான். இலைதழைகளையும் புதர்களையும் கொளுத்தி உருவாக்கி சாம்பலையும், காடுகளிலிருந்து கைப்பற்றியோ பிற சமூகத்தவரிடமிருந்து கவர்ந்தோ கொணர்ந்து பழக்கி வீட்டு விலங்குகளாக மாற்றிய மாடுகளின் சாணத்தையும் உரமாகப் பயன்படுத்தி விதைத்துப் பயிர் செய்வதே அப்பண்பாட்டு நிலை மக்களின் பணியாக இருந்தது. அவர்கள் இந்திரனின் தளபதிகளும் படைவீரர்களுமாவர். இந்திரனின் ஆயுதம் இடி மின்னலைக் குறிக்கும் வஜ்ராயுதம் எனப்பட்ட போர்க் கருவி – அல்லது போர்ப் பயிற்சிக் கருவி – யாக இருக்க, களைக்கொட்டு விவசாயத்துக்கும் நிலத்தைத் தோண்டுவதற்கும் பயன்பட்ட ‘கணிச்சி’ என்ற கற்கருவியே7 படைத் தளபதிகளுக்கும் பிற வீரர்களுக்கும் உரிய கருவியாக இருந்தது. இந்திரனின் தளபதியாக வேதங்களில் வருணிக்கப்படும் ருத்ரனோடு ஒத்த சங்ககாலத் தெய்வம், கணிச்சியை ஏந்திய, காளையை வென்றடக்கிய ‘கூற்று’ ஆகும். 8

மழையேறு = மழுவாள்

இந்திரனின் ஆயுதம் வஜ்ரம் (வச்சிரம்) எனப்பட்டது. சங்க காலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்களில் இது வயிரப்படை என்றும் வயிரவேல் என்றும் குறிப்பிடப்பட்டாலும், வடமொழிப் புராணங்கள் இது பலமுனைகளைக் கொண்ட ஆயுதம் என்றே குறித்துள்ளன. வஜ்ராயுதம் என்பது எலும்பினாலானது என்ற புராணச் செய்தி9 கூட, அது உலோக காலத்துக்கு முற்பட்டது என்ற உட்பொருளிலேயே கூறப்பட்டதுள்ள. வஜ்ராயுதத்தை ‘இடிப்படை’ என்று சிலப்பதிகாரமும் (ஆய்ச்சியர் குரவை, படர்க்கைப் பரவல்.4) ‘மழையேறு’ என்று கம்பராமாயணமும் (யுத்த காண்டம், அதிகாயன் வதைப்படலம், 165) குறிப்பிடுகின்றன. இந்த அடிப்படையில் நோக்கினால் மின்னல் கொடி போன்று தோற்றமளிக்கிற, பல கவர்(கிளை)களுடன் கூடிய ‘மடுவு’ எனப்படும் மான் கொம்பு ஆயுதத்தை நாம் அடையாளங் காணலாம். இந்த ஆயுதம் ‘மரூ’ என வடமொழியில் குறிப்பிடப்பட்டது. மான் எனப் பொருள்படும் ‘மரை’ (சமஸ்கிருதத்தில் ‘ம்ருக’) என்ற சொல்லுடனும் கொம்பு எனப் பொருள்படும் ‘மருப்பு’ என்ற சொல்லுடனும் இது தொடர்புடையதாகும். ‘மரூ’ என்ற இவ் ஆயுதமே மழு என வழங்கியதாகத் தோன்றுகிறது.

‘பரசு’ என வடமொழியில் குறிப்பிடப்பட்ட ஆயுதமே மழு எனக் கருதப்படுகிறது. சத்திரிய குலங்களை வேரறுத்த பரசுராமனை ‘மன் மருங்கறுத்த மழுவாள் நெடியோன்’ என அகநானூறும் (220:5) மணிமேகலையும் (22:25) சுட்டுகின்றன. பரசுராமன் கோடரி எனப்படும் உலோக ஆயுதத்தை ஏந்தியவனாகவே சிற்பங்களில் சித்திரிக்கப்படுவான். எனினும் பரசு என்ற சமஸ்கிருதச் சொல்லுக்குரிய பல பொருள்களுள் முதன்மையான பொருள், இடிப்படை – மின்னல்படை என்பதேயாகும். 10 பரசுராமன் வேத காலத்துக்குப் பிற்பட்ட இதிகாச கால வீரனாவான். சத்திரிய குலங்களை வேரறுத்து பிராம்மண வர்ணத்தவரின் மேலாண்மையை நிறுவியவனாகக் கருதப்படும் பரசுராமன், உலோக காலத்துக்கு முற்பட்டவனே. பரசுராமனும் யக்ஞம் எனப்பட்ட படைப்புத் தொழிலுக்குத் தலைமை தாங்கியதன் மூலம் உற்பத்தி சக்திகளைக் கையகப்படுத்தியவனே என்பதால் இந்திரனோடு போட்டியிடும் தகுதி படைத்தவனாகிறான்.11 எனவே மழு அல்லது பரசு என்பது சமூகத் தலைமைக்குரிய அடையாளமாகத் திகழ்ந்த போர்க் கருவியே என்பதிலும் வஜ்ராயுதத்தை யொத்ததே என்பதிலும் ஐயமில்லை.

பக்தி இலக்கியங்களில் – குறிப்பாகத் தேவாரத்தில் – சிவபிரானின் ஆயுதங்களுள் முதன்மையான ஆயுதமாக மழுவே குறிப்பிடப்படுகிறது. இம் மழு, தீயாகவும், நெருப்புக் குழம்பாகவும், கனன்று கொண்டிருக்கிற உலோகக் கட்டியாகவும், உலோகத்தாலான ஆயுதமாகவும் சித்திரிக்கப்படுகிறது. மின்னலில் அடங்கியிருக்கும் நெருப்பு ஆற்றல் அல்லது விண் கொள்ளிக் கற்கள் (meteor) என்ற கருத்தோட்டத்திலிருந்து இச்சிந்தனை உருவாகி வளர்ச்சி பெற்றிருக்கலாம். அதே வேளையில், சிவபிரான் ‘ஏனமருப்பு’ எனப்படும் பன்றிக்கொம்பு ஆயுதத்தை வைத்திருப்பதாகவும் தேவராரம் குறிப்பிடுகிறது. 12 சிவபிரான் கையிலுள்ள பரசு ஆயுதத்தைப் ‘பரஸ்வதாயுதம்’ என்றும் குறிப்பிடுவதுண்டு. ‘பரஸ்வத’ என்பது காண்டாமிருகத்தைக் குறிக்கும் என்றும், வெண்பன்றி எனப் பொருள்படும் ‘ஸ்வத பரஹ’ அல்லது ‘ஸ்வேத வராஹ’ என்ற தொடரே பரஸ்வத எனத் திரிந்ததாகவும் கருதப்படுகின்றன. எனவே பரஸ்வதாயுதம் என்பது காண்டாமிருகக் கொம்பு அல்லது காட்டுப் பன்றியின் கொம்பு – இவ்விரண்டனுள் ஒன்றைக் குறித்திருக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் மழு என்ற சங்க கால ஆயுதம் உலோகப் பயன்பாட்டு நிலைக்கு முற்பட்ட, கொம்பினாலான ஆயுதமாகவே இருக்க வேண்டுமென்பது உறுதியாகிறது.

‘மழுவாள் நெடியோன்’ பற்றிய வேறொரு குறிப்பு மதுரைக் காஞ்சியில் இடம் பெற்றுள்ளது. ஆயினும் இத்தெய்வம் பற்றிய வருணனைகளைக் கவனித்தால் இவன் இதிகாச புருடனாகிய பரசுராமன் அல்லன் என்பது தெளிவாகத் தெரிகிறது. மதுரை நகரில் பூவும் நறுமணப் புகையும் கொண்டு வழிபடப்பட்ட கடவுட்பள்ளி ஒன்றிருந்தது. அப்பள்ளியில், வாடாத பூக்களைக் சூடிய, இமைக்காத பார்வையை உடைய, அவியுணவை உண்கிற தேவர்களுக்கு அந்திக்காலத்தில் ஸ்ரீபலி வழங்கப்பட்டது. அத்தேவர்கள், மழுவாள் நெடியோனைத் தலைவனாகக் கொண்டவர்கள். அம் மழுவாள் நெடியோன், நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்ற ஐம்பூதங்களையும் படைத்தவன் ஆவான் (மதுரைக் காஞ்சி – 453 – 467).

நாம் இதுவரை விவாதித்து வந்த குறிப்புகளின் அடிப்படையில் பார்க்கையில் இம் மழுவாள் நெடியோன் இந்திரனே என்பது தெளிவாகிறது. ஐம்பூதங்களும் கலந்த மயக்கமே உலகம் எனத் தொல்காப்பியம் (பொருளதிகாரம், மரபியல், 91) குறிப்பிடுகிற கருத்தின் அடிப்படையில் மேற்கூறிய மதுரைக் காஞ்சி வருணனைக்குப் பொருள் கொண்டால் உலகைப் படைத்தவன் இந்திரனே என்ற ரிக் வேதக் கருத்து மதுரைக் காஞ்சியில் பதிவு பெற்றிருப்பதை உணரலாம்.

ஐம்பூதங்களுக்கு நிகரான ஐம்பொறிகளின் (பஞ்சேந்திரியங்களின்) தெய்வம்; ஐம்பொறிகளால் நுகரப்படும் போகத்தின் தெய்வம்; போகத்தில் விளையும் படைப்பின் தெய்வம் – என்ற சித்திரம் இந்திரனுக்கே பொருந்தக் கூடியது. படைப்பாற்றல் அடங்கிய ஜீவசக்தியை இந்திரியம் எனக் குறிப்பிடுவது இந்த அடிப்படையிலேயே. மனித உடலைப் பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டுப் பிண்டகோசம் – அண்டகோசம் (microcosm – macrocosm) எனக் கூறுவதுண்டு. கோசம் (cosmos) என்பது இணைந்து செயல்படும் தொகுதி எனப்பொருள்படும். கி.பி.12 ஆம் நூற்றாண்டைய இலக்கியமான தக்கயாகப்பரணி இந்திரன் சிவபிரானின் படைகளைத் தன்னுடைய படைகளுடன் ஒப்பிட்டுத் தற்பெருமை பேசுவதாகக் குறிப்பிடுகையில், ‘வண்டு ஊதினாலே ஒடிந்து விழுந்துவிடும் பேய்களும் பூதங்களும்தாம் சிவனுடைய படைகள்; ஐம்பெரும்பூதங்களும் என்னுடைய படைகள். எனவே என்னுடைய படைகளே பெரியவை’ எனக் கூறுவதாகக் குறிப்பிடுகிறது.

சுரும்பூத விழும்பேயொடு சூழ்பூதம் அவற்கு ஐம் பெரும்பூதமும் எவ்விரும் எனக்கே படைபெரிதே (தக்கயாகப்பரணி, தாழிசை 450)

உலகைப் படைத்ததோடு மட்டுமின்றி உயிர்களுக்குரிய வாழ்வியற் சட்டங்களை வகுத்தவனும் இந்திரனே எனக் கருதப்பட்டது. ‘ஐந்திரம்’ எனப்பட்ட மொழி இலக்கணத்தை இந்திரன் இயற்றியிருந்தான் என்ற நம்பிக்கைக்கு அடிப்படை இதுவே.

உலகில் வாழும் உயிர்களுக்கிடையே நிலவுகிற உறவுக்கு அடிப்படையாக இருப்பது புணர்ச்சிச் செலல்பாடேயாகும். தனிமனிதனின் கண்ணோட்டத்தில் பார்த்தால் தாய், தந்தை, உடன்பிறப்பு என்ற மூன்று உறவுகளே இரத்த உறவுகளாகும். இரத்த உறவுகளுக்குக் காரணகர்த்தாவாக இருப்பவன் இந்திரனே. இக்கருத்தோட்டம் அப்பர் தேவாரத்தில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது: ‘தாய், தந்தை உடன் பிறப்புகள் என மூன்று வித உறவுகள் வடிவில் உலகத்து உயிர்களைப் படைத்த தெய்வம் குறித்த எண்ணமே (அதாவது இந்திப்போக ஆசையே) என் மனதில் நிறைந்துள்ளது. ஆனால் தன்னுடைய அடியார்களாகிய எங்களுக்கு இடர் வரும்போது தோன்றாத் துணையாயிருந்து காப்பவனோ, தேவர்களின் அன்பனான திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன்தான். அது ஏன்? (அவன் தான் உண்மையான யஜமானன் என்பதாலா?)

ஈன்றாளுமாய் எனக் கெந்தையுமாய் உடன்தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத்துகந்தான் மனத்துள்ளிருக்க ஏன்தான் இமையவர்க் கன்பன் திருப்பாதிரிப் புலியூர்த் தோன்றாத் துணையாயிருந்தனன் தன்னடியோங்களுக்கே (அப்பர் தேவாரம் – திருப்பாதிரிப் புலியூர்ப் பதிகம்)

மருத விழா = இந்திர விழா

இயற்கையின் பூப்புப் பருவம் என்பது சித்திரைமாத இளவேனிற் பருவமே.13 லத்தீன் மொழியில் இளவேனிலை – வசந்தத்தைக் – குறிக்கும் vernal என்ற சொல் பூத்தல் எனப் பொருள்படும் vernare என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகும். பூவின் முழுமையான மலர்ச்சி நிலையைக் குறிக்கும் ‘வீ’ என்ற சொல்லும், அப்பர் பெருமாளின் ‘வீங்கிளவேனில்’ என்ற சொல்லாட்சியும் (மாசில்வீணையும்’ எனத் தொடங்கும் தேவாரப் பாடல்) (பூப்பு) vernare என்ற சொல்லுடனும் அதன் கருத்துடனும் தொடர்புடையவையாகும். சமஸ்கிருதத்தில் வசந்தத்தை, பூக்களை உருவாக்கும் பருவம் என்று பொருள்படும் வகையில் “குஸும ஆகர ருது” என்று குறிப்பிடுவதுண்டு. (பகவத்கீதை 10:35.) பூ, போகம் என்ற சொற்கள் நிலத்தின் விளைச்சலோடு தொடர்புடைய சொற்களாகவே பயன்பாட்டிலுள்ளன. சித்திரையில் பூக்கும் செடி, கொடி, மரங்களுள் முதன்மையானது மருத மரமாதலால் விளைநிலம் சார்ந்த தீம்புனல் உலகம் ‘மருதம்’ என்றே பெயர்பெற்றது. பூப்புப் பருவமாகிய சித்திரை மாதத்தில்தான் இந்திரவிழா கொண்டாப்பட்டதெனச் சிலப்பதிகாரத்தால் (வ:64) தெரியவருகிறது. ‘இந்திர விழவிற் பூ’ என ஐங்குறுநூறு (பா. 62) குறிப்பிடுகிறது. ‘பலபூ விழவு’ எனப் பதிற்றுப் பத்து (30:15) குறிப்பிடுவது இந்திர விழாவையே என உ.வே.சா. கருதுகிறார்.14

‘மருத முன்றுறை’ எனப்பட்ட மதுரையில் மேஷ (ஆடு) ராசியில் சூரியன் புகுகின்ற சித்திரை மாதத்தின் முதல் நாளன்று “கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி”யில் அதாவது செங்கழுநீர் மலர்கின்ற கதிரவனின் உதய வேளையில் நாட்டு மக்கள் கூடிப் பேரொலியெழுப்பி விழாக் கொண்டாடினர் என மதுரைக்காஞ்சி (வரி 427-8) குறிப்பிடுகிறது. இப்பேரொலி, ‘பொங்கலோ பொங்கல்’ என்பது போன்ற விளியாகவோ ஜெயகோஷமாகவோ இருந்திருக்கலாம்.15 இப்பேரொலி ‘இந்திர கோஷணை’ என்றே மணிமேகலையில் (17:69) குறிப்பிடப்படுகிறது. இது மருதநில விளைச்சல் தொடர்பான விழாவே என்பதில் ஐயமில்லை.

வட மொழியில் மருத மரம் என்பது ‘அர்ஜூன விருட்சம்’ எனப்படும். வைதிக மரபில் அஸ்வத்த (அரச) மரபே இந்திரனுடன் தொடர்புபடுத்தப்படும். ஆயினும், பஞ்ச பாண்டவர்களில் இந்திரனின் அம்சமாகப் பிறந்தவன் அர்ஜூனன் ஆவான். காரிருள் வேளையில் இடி இடித்தால் அச்சத்துடன் ‘அர்ஜூனா அர்ஜூனா’ என உச்சரிக்கும் வழக்கம் பொதுமக்களில் சிலரிடையே இருந்து வருகிறது. பாலி மொழியில் சக்கன் என இந்திரன் அழைக்கபடுகிறான். சக்ரா (sakra) என்ற சொல் மருத மரத்தைக் குறிக்கும் இவையெல்லாம் இந்திர வழிபாட்டில் நிலவிய பிரதேச வேறுபாடுகளை உணர்த்தக்கூடும்.16

இந்திர வழிபாட்டின் வீழ்ச்சி

இந்திர வழிபாடு வீழ்ச்சியடைந்தது பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டியதாகும். உலோகப் பயன்பாட்டுப் பண்பாட்டு நிலையில் வஜ்ராயுதம் வழக்கிழந்து போனதை, முருகன் தேவசேனாபதியான புராணக் கதையுடன் இணைத்து நா. வானமாமலை அவர்கள் விளக்கியுள்ளார்.17 மாயோன் – வாலியோன் (கண்ணன் – பலராமன்) வழிபாட்டு வளர்ச்சியின் பின்னணியில் நதிநீர்ப் பாசன முயற்சிகள், உழவு மாடுகளைப் பயன்படுத்திக் கலப்பை விவசாயம் மேற்கொள்ளப் பட்டமை – ஆகியவற்றின் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும். விவசாயத் தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக மாயோனின் மனைவியராக நிலமகளும் திருமகளும் (பூதேவியும் ஸ்ரீதேவியும்) அங்கீகரிக்கப்படும் நிலை தோன்றிவிட்டது. திருமகள் ‘இந்திரா’ என்றே வடமொழியில் குறிப்பிடப்படுகிறாள். உற்பத்தி சக்திகள் புதிய கற்கருவிப் பயன்பாட்டுப் பண்பாட்டின் தலைமைக் குடிகளிடமிருந்து ‘வம்ப வேந்தர்கள்’ கைக்குச் சென்றுவிட்டன என்பதை இவை உணர்த்துகின்றன. இந்திரனின் படைத்தளபதியாக இருந்த வடபுல ருத்ரன் – தமிழகக் கூற்றுத் தெய்வத்தின் அம்சங்களையும் சுவீகரித்து கங்காதரராகவும் காளை வாகனராகவும் வளர்ந்து, நதிநீர்ப் பாசனத்தாலும் உழவு மாடுகளாலும் வளர்ச்சியடைந்த விவசாயப் பொருளாதார நிலையின் யஜமானனாக யக்ஞத் தலைவனாக – வேரூன்றிவிட்ட நிலையைப் பக்தி இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இத்தகைய சமூகவியல் நிகழ்வுகள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கையில், இந்திரியம் என்ற ஜீவசக்திக்குள் புதைந்திருக்கும் வித்து (விந்து, அணு) என்பது பிரம்மாவாக (அண்ட விதையாக) அடையாளம் காணப்பட்டது.18 இது அல் பிரஹ்மா அல்லது ஆப்ரஹாம் என்ற மனிதகுல மூதாதை பற்றிய செமித்திய சிந்தனைத் தாக்கத்தின் விளைவு ஆகலாம். தத்துவ மட்டத்திலும் இந்திரனின் தனித்தன்மை கேள்விக்குரியதாயிற்று. இந்திர வழிபாட்டின் வீழ்ச்சியை இத் தத்துவச் சிந்தனை மேலும் விரைவுபடுத்திற்று என்பதில் ஐயமில்லை.

அடிக்குறிப்புகள்:

1. ‘தாமரை’ என்பது பேரெண்ணைக் குறிக்கும் சொல்லாகும். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளி மயங்கியல் நூற்பா 97இல் இது மறைமுகமாகச் சுட்டப்படுகிறது. இந்திரன் உடலெங்கும் கண் பெற்றவனாதலால் அவன் தாமரைக் கண்ணான் எனக் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

2. நாலடியார் மூலமும் பதிப்பிக்கப்படாத பழைய உரையும் – ச.கிருஷ்ணமூர்த்தி, ப. 27, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2007

3. மகா வம்சம் VII : 5 – “Mahavamsa’ – translated into German by Wilhelm Geiger; translated (from the German version) into English by Mabel Haynes Bode – p.55, footnote 2, Published by Asian Educational Services, Chennai – 2003.

4. முருகனையே தனிப்பெருந் தெய்வமாகக் கொண்டு சந்தக் கவிதைகள் இயற்றிய அருணகிரிநாதர் (கி.பி. 14-15ஆம் நூற்றாண்டு) ‘அலைகடல் வளைந்துடுத்து’ எனத் தொடங்கம் திருப்புகழில் ‘அளகையரசன் தனக்கும் அமரரசன் தனக்கும் அரசென நிரந்தரிக்க ஆளலாம்’ எனப் பாடுகிறார். 18-19ஆம் நூற்றாண்டுகள் வரை இவ்வாறு பாடுவது கவி மரபாக இருந்துள்ளது. 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திரைப்படக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ‘இந்திரன்தான் விண்ணாட்டின் அரசனென்ற இலக்கணத்தைத் திருத்தியது மனித சக்தி’ எனப் பாடினார்.

5. இவ்விரு செல்வங்களையும் சந்தானலட்சுமி, தான்யலட்சுமி என்ற பெயரில் அஷ்டலட்சுமிகளுள் இருவராகக் கொள்ளும் மரபு இடைக்காலத்தில் ஏற்பட்டது.

6. ஆண்குறியைப் பேச்சுவழக்கில் (இடக்கரடக்கலாக) பிரஜாபதி எனக் குறிப்பிடுவதுண்டு. இது படைப்பாற்றலோடு தொடர்புடைய வழக்காகும்.

7. கணிச்சியைத் தொல்லியாளர்கள் ‘celt’ எனக் குறிப்பிடுவர். உலகு முற்றிலும் புதிய கற்கருவிப் பயன்பாட்டுப் பண்பாட்டு நிலையில் இக்கருவியே முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது.

8. ‘ஏற்ற வலனுயரிய எரிமருள் அவரிசடை மாற்றருங் கணிச்சி மணி மிடற்றோன் … கூற்று’ – புறநானூறு. 56:1-11

9. தவ வலிமை மிக்க முனிவர்களின் முதுகெலும்பிலும் கபாலத்திலும் மாந்திரீக ஆற்றல் நிரம்பியிருக்கும் எனக் கருதப்பட்டது. அக்கருத்தின் அடிப்படையில் ‘கட்வாங்கம்’ என்ற, முதுகெலும்பும் மண்டையோடும் இணைந்த ஆயுதம் சிற்பங்களில் சித்திரிக்கப்படுவதுண்டு.

10. A Students’ Sanskrit – English Dictionary p. 317, V.S. Apte, Motilal Banarsidass Publishers, 1967.

11. யக்ஞம் என்பது ‘ய – ஜன’ (இவர்கள் படைக்கின்றனர்) எனப் பொருள்படும் என எஸ்.ஏ டாங்கே ‘பண்டைக் கால இந்தியா’ என்ற நூலில் சுட்டிக் காட்டியுள்ளார். உற்பத்தி சக்திகளைச் சத்திரியர்கள் வசமிருந்து பரசுராமன் கைப்பற்றிய நிகழ்வே பல்வேறு உருவங்களில் உலவி வருகிறது. தென்கிழக்காசிய நாடுகளில் ‘ராமபர்சூ’ என்ற அசுரனுக்கும் வர்ஜூன் (மழைக்கடவுள் எனப் பொருள். பர்ஜன்யன் என்பதன் திரிபு) என்ற தேவனுக்குமிடையே நிகழ்ந்த போர் பற்றிய கதைகள் வழங்குகின்றன என்பதை மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் தமது ‘பெளத்தமும் தமிழும்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

12. ‘ஏன வெண்கொம்பொடு எழில் திகழ்மத்தமும் இள அரவும் கூனல் வெண்பிறை தவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்’ சம்பந்தர் தேவாரம், திருநெல்வேலிப் பதிகம், (மருந்தலை மந்திரம்) பா. 5. ‘ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டுகந்து’ – சம்பந்தர், திருவக்கரைப் பதிகம்(கறையணி மாமிடற்றான்) பா.5. ‘என்பொடு கெம்பொடாமை இவை மார்பிலங்க’ – சம்பந்தர், கோளறு திருப்பதிகம், பா. 2.

13. தற்காலத்தில் இளவேனிற் பருவத்தில் அம்மன் கோயில்களில் பூந்தேர் விழா, பூச்சொரிதல் விழா ஆகியன நடைபெற்று வருவதில் வாழ்வியல் – பண்பாட்டுத் தொடர்ச்சியை உணரலாம்.

14. பதிற்றுப் பத்து மூலமும் பழைய உரையும் – உ.வே.சாமிநாதையர் குறிப்புரைகளுடன் : ப. 68, பதிப்பு: உ.வே.சா. நூல் நிலையம், சென்னை – 41, 1980.

15. காவிரிப்பூம்பட்டினத்தில் நிகழ்ந்த இந்திர விழாவில், காவற் பூதத்துப் பீடிகையில் ‘பொங்கலும்’ படைக்கப்பட்டதெனச் சிலப்பதிகாரம் (5:69) குறிப்பிடுவது இங்கு கவனிக்கத்தக்கது.

16. இந்திரனைக் குறிப்படுவதற்கு வடமொழியில் ‘மருத்பதி’ என்ற பெயர் உள்ளது. மருத் கணங்கள் எனப்பட்ட பருவக் காற்றுக் கணங்களுக்குத் தலைவன் என்பது இதன் பொருளாகும். பனிக்காலம் முடிந்த பின்னர் சித்திரை மாதத்தில் மாருதம் (தென்றல்) வீசத் தொடங்கும் வைகாசி மாதம் இடைப்பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். எனவே பருவக்காற்றுக்கும் பருவமழைக்கும் தெய்வமாக இந்திரனைப் போற்றும் மரபு, பருவமழை பெய்கிற நிலைப்பகுதிகளிலேயே தோன்றி வளர்ந்திருக்க வேண்டும்.

17. Skanda – Muruga synthesis, N. Vanamamalai in South Indian Studies – Vol II, Editor: R. Nagaswamy, Publisher: SAHER, Chennai, 1978.

18. பிரம்மவாதி என்பவன், இவ்வுலகு பிரம்மா இட்ட முட்டை என்ற கோட்பாட்டைக் கொண்டவன் என மணிமேகலை (27:96-97) குறிப்பிடுகிறது. அண்டம் என்பது முட்டை எனப் பொருள்படும். பிரம்மாண்டம் என்ற தொடர் கவனத்துக்குரியது.

(தமிழினி கலை இதழ், ஜூன் 2008 இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்.)

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s