பிரபஞ்சன் எழுதிய எழுதப்படாத சரித்திரம்

தேவேந்திர வேளாளர்களின் குலமரபுக் கதைகளாகப் பல கிடைக்கின்றன. ஆய்வாளர் தே.ஞானசேகரன் சுமார் 12 கதைகளைத் தொகுத்துத் (மள்ளர் சமூக வரலாறு) தந்திருக்கிறார். ஒரு கதை, தேவேந்திரனுக்கும் நீர் நிலையில் இருக்கும் தாமரையில் இருக்கும் திருமகளுக்கும் பிறந்த குழந்தையின் வழியினரே தேவேந்திரர்கள் என்கிறது. தேவேந்திரனின் வியர்வையில் பிறந்தவர்கள் அவர்கள் என்கிறது ஒரு கதை.

இந்திரனின் பிள்ளை தேவேந்திரன் பள்ளிக்குச் செல்லாமல், குழிதோண்டி, தண்ணீர்ப் பாய்ச்சி உழவு செய்து விளையாடினான். இந்திரன் அதைக் கண்டு தேவேந்திரனை பூமிக்கு அனுப்பி வேளாண்மை செய்யச் சொல்லி இருக்கிறான். அந்த தேவேந்திரன் பூமிக்கு நெல்லைக் கொண்டு வந்து நட்டான். பார்வதியின் வியர்வையில் பிறந்தவன் கழியன்(கழிநீர் நீலை) என்பவன். அவன் மேலோகத்தில் முதல் முதலாக நெல்லைக் கண்டுபிடித்து அதைச் சாப்பிட்ட சிவன், அந்த அரிசியின் சுவையைப் பாராட்டுகிறார். அந்த கழியன் பூமியில் நெல் விவசாயம் செய்கிறான்.

ஒரு கதை இப்படிச் சொல்கிறது. பார்வதிக்கும் சிவனுக்கும் வல்லபன் என்று ஒரு குழந்தை பிறக்கிறான். வல்லபன், இந்திரனுக்கு வளர்ப்பு மகனாகிறான். அப்போது சிவன், ‘நீ நெல்லை உற்பத்தி செய்து, பூலோகத்தில் பயிர் செய்து மக்களைக் காப்பாற்று, நீ வேண்டும்போது பார்வதி கங்கை நீரைப் பொழிவாள், நீ இருக்கும் இடம் என்றென்றும் பசுமையாகவும், நீர் நிறைந்தும் இருக்கும் என்று வரம் அளித்து பூமிக்கு அவனை அனுப்புகிறார். தேவேந்திரன் குடும்பம், ‘செந்நெல், மண்வெட்டி, உழுவயல், நீர் நிறைந்த குளம், ஆறு’ வேண்டுமென்று கேட்டது. சிவனார் மகிழ்ந்து, கேட்டதைக் கொடுத்தார். அதுமுதல் தேவேந்திரர்கள் நெல் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.

தேவேந்திர குல வேளாளர்களில் குலமரபுக் கதைகளின் சாரம் இதுதான். இந்தப் புராண, மக்கள் மரபுக் கதைகள், மூன்று விஷயங்களைத் தம் பாணியில் சொல்லி இருக்கின்றன. ஒன்று, நெல் மேல் உலகில் இருந்து கொண்டு வரப்பட்டது. இரண்டு, தேவேந்திர குலம் நெல்லை உருவாக்கி, உற்பத்தி செய்து வாழும் குலம். மூன்று, நெல் விவசாயத்துக்கு ஆதாரமாக நீர் நிலைகளை உருவாக்கியவர்கள். இக் கருத்தே அக் கதைகளின் சாரம். இவைகளை ஆராய்வோம். உலகம் முழுக்கப் பழைமையான சமுதாயங்களின் தோற்றக் கதைகள் இப்படியான குறியீடுகளாகத்தான் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இவைகள் கற்பனைகள் அல்ல. கதை ரூபமான உண்மைகள்.

1. நெல் மேல் உலகில் இருந்து, இந்திரன் உலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு இருக்க முடியாது. ஆனால், இதர பகுதியில் இருந்து அதாவது மலை மாதிரி குறிஞ்சி நிலப் பகுதியில் இருந்து ஆதி உழவர்களால் சமதளமான மருத நிலத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்பதே இக் கதையின் அர்த்தம். மலைப் பகுதியில், சமவெளிகளில் இயற்கையாக விளைந்துக்கிடந்த நெல் மணிகளைக் கண்டடைந்து, அதை விவசாய விஞ்ஞானமாக மாற்றிக் கழனிகளைத் தயார் செய்து பண்படுத்தி நெல் விதைத்து, நாற்றுகளை உருவாக்கி, மாற்றி நட்டு, விவசாயம் செய்திருப்பதையே அந்தக் கதைகள் குறிப்பிடுகின்றன. மலை என்பதைத்தான் மேல், மேல் உலகம் என்று மக்கள் கற்பனை செய்திருக்கிறார்கள்.

2. ஆதி உழவர்களான, தேவேந்திர குலம், சுமார் அறுபது வகையான நெல்லைக் கண்டுபிடித்து விவசாயம் செய்திருக்கிறது. சங்க காலத்துக்குச் சற்று முன்னர், தமிழ் மக்கள் உணவில் நெல் பிரதான இடம் பெறவில்லை. வரகரிசி, தினை, கொள்ளு, அவரை ஆகியவை பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டதாக, புறநானூறு 335ம் பாடல் சொல்கிறது. ஆக, தமிழர் உணவில் நெல் என்கிற உணவுப் பொருளைச் சேர்த்ததில் ஆதிகால உழவர்களான மள்ளர்க்குப் பேரிடம் உண்டு என்பது இந்தக் கதைகளின் அடுத்த சேதி.

3. நெல் விவசாயத்துக்காக நீர் நிலை, ஆறு, குளம், ஏரி, வாய்க்கால்கள் வேண்டும். அதை, நெல் விவசாயம் செய்த மள்ளர்கள் உருவாக்கினார்கள். இது ஒரு விஞ்ஞானம்தான். மழைத் தண்ணீர் ஓடும் பாதையைக் கண்டறிந்து, அது தேங்கி நிற்கும் இடத்தில் குளம் வெட்டினார்கள். பெரும் பள்ளத்தை ஏரி ஆக்கினார்கள். இயற்கை நீர்ப் பெருக்கை ஆறு என்று பெயரிட்டு (நிலத்தை அறுத்துக்கொண்டு செல்வதால் அது ஆறு ஆயிற்று. ஆறு என்றால் வழி என்று பொருள்) அதன் இரு கரையிலும் மேடுயர்த்திக் கரை கட்டிக்கொண்டார்கள். நீரை நிர்வாகம் செய்தவர்கள், நீர் ஆணிக்கர் என்று சொல்லப்பட்டார்கள். பண்ணைக்கு உரிமையாளர் பண்ணாடி ஆனார்கள். கடைமடைப் பகுதியில் விவசாயம் செய்தவர் கடையர் ஆனார்கள். மடை எடுக்கும் நுட்பம் கற்றவர்கள் மடையர் ஆனார்கள். களத்தில்நெற்களத்தில் பணி செய்தவர் களமர் ஆனார்கள். கால் என்றால் நிலப்பகுதி என்று பொருள். வெற்றிலைக் கால், என்றால் வெற்றிலை விளைநிலம் என்று அர்த்தம். நெற்காலில் பணி செய்தவர்கள் காலாடி ஆனார்கள். வாய்க்கால்காரர்களே வாய்காரர்.

மருத நிலத்தின் விவசாயம் நிலை பெற்றதை ஒட்டிய காலப் பகுதியில்தான்சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், குடும்பம் என்கிற சமூக அமைப்பு தோன்றி இருக்கிறது. ஒரு தலைவி, ஒரு தலைவன், குழந்தைகள் என்ற ரத்த உறவு கொண்டவர்கள், ஒரு கூரையின் கீழ், தனிச் சொத்து உரிமையோடு வாழத் தொடங்கிய காலம்தான் குடும்பம் என்ற அமைப்பு உருவான காலம். அது, மருத நில உழவர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. அந்த அமைப்புக்குக் காரணமாக இருந்த மருத நில உழவர்கள் குடும்பனார் எனப்பட்டார்கள். குலம், குழு வாழ்க்கை சிதைந்து, தனிச் சொத்து, தனிக்குடும்பம் உருவான பழம் காலத்து வரலாறு இது. சங்க இலக்கியம் முழுக்க முழுக்கக்

குடும்ப அமைப்பை நிலைப் பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதற்குக் காரணம், உருவாகி வந்து கொண்டிருக்கிற புதிய நாகரிகமாகிய ‘குடும்பம்’ என்ற புதிய வாழ்க்கைமுறையை நிலைபேறு அடையச் செய்யத்தான்.

குடும்பம் என்பது, ஒரு சிறிய அரசாங்கம். பெரிய அரசாங்கத்தின் சிறிய பதிப்பு அது. அங்கு அரசன். இங்கு குடும்பத் தலைவன். அங்கு அரசி. இங்கு தலைவி. அங்கு அரசுக்கு உரியவன் இளவரசன். இங்கு சொத்துக்கு உரியவர்கள் குழந்தைகள். இந்தக் குடும்பம் என்ற அமைப்பில்தான் ‘ஆண் தலைமை’ உருவாகிறது. (அது சரியா, தவறா? என்று ஆராயும் இடம் இதுவல்ல.) குடும்ப அமைப்பு நிலைபெற்ற பிறகுதான் திட்டவட்டமான சட்டமுறைகள், அமைப்புகள் கொண்ட அரசுகள் உருவாகின்றன.

சங்க காலத்திலேயே இந்திர வணக்கம் இருந்திருக்கிறது. இந்திரன், பெரிய கடவுளாக இருந்திருக்கிறான். இந்திரனுக்கு விழா எடுக்கும் வழக்கமும் சங்கத் தமிழர்களிடம் இருந்திருக்கிறது. இதற்கான ஆதாரம் சங்க இலக்கியமான ஐங்குறு நூற்றில், ஓரம் போகியார் எழுதிய மருதம் தொடர்பான பாடலில் இந்திர விழா பற்றி வந்துள்ள செய்தி இது:

இந்திர விழாவிற் பூவின் அன்ன புன்தலைப் பேடை வரி நிழல் அகவும் இவ்வூர் மங்கையர்த் தொகுத்து, இனி எவ்வூர் நின்றன்று மகிழ்ன நின் தேரே& என்பது அந்தப் பாடல்.

இந்திர விழாவுக்குப் பலவிதமான பூக்களைத் தருவித்துத் தொகுத்தாற்போல, இவ்வூர் மங்கையரைத் தொகுத்து ஆடல் பாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பது இப்பாட்டின் சுருங்கிய பொருள்.

இந்திரவிழா கொண்டாடப்-படுவதன் நோக்கம், முதல் நோக்கம் மழை. மழைக்குக் கடவுளாகிய இந்திரனை விழா எடுத்து வணங்கி அவன் அருளாகிய மழையைப் பெறுவது என்பதே. மழை பெய்தால் விவசாயம் சிறக்கும். உணவு உற்பத்தி பெருகினால், நாட்டில் பசி மறையும். வளம் பெருகும். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பதாகும். அதனால்தான் பொங்கலுக்கு முதல்நாள் இந்திரனாகிய போகிக்கு (போகிபோகம் துய்ப்பவன்) ஒதுக்கப்பட்டது.

மருத நிலத்து வேந்தன், இந்திரன் வழிபாடு இவ்வளவு சிறப்பாக நடந்த நாட்டில், அது வழக்கமற்று மறைந்து போகக் காரணம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. சிலப்பதிகாரம் அதற்குப் பிந்தைய மணிமேகலை காலத்திலும், கி.பி. 5ம், 6ம் நூற்றாண்டு வரை இந்திர வணக்கம் பெரு வழக்காக இருந்து வருகிறது. பின் ஏன் மறைந்தது?

அறிஞர் குருசாமி சித்தர் களப்பிரர் மற்றும் வடுகர் ஆட்சிக் காலங்களில் சமய தளத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு, தமிழர் வாழ்க்கை முறை மாறியது என்கிறார். உண்மைதான். 6ம் நூற்றாண்டுக்குப் பிறகு, சைவ, வைணவ மதங்கள், நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டன.

வைணவ மதக் கடவுளான கண்ணன், இந்திரனுக்கு விழா எடுப்பதைத் தடை செய்கிறான். இந்திரன் கோபம்கொண்டு, ஊரை அழிக்கும் மழையை, புயலை அனுப்புகிறான். கண்ணன், கோவர்த்தனகிரி மலையைத் தூக்கிப் பிடித்து, மக்களைக் காத்து, இந்திரனின் கர்வத்தை அழித்தான் என்கிற கதை இந்திர மதத்துக்கும், வைணவத்துக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தின் கதைதான். சங்க காலத்துக்குப் பிறகு, குறிப்பாக சோழப் பேரரசர்கள் காலத்தில் அரசர்களின் ஆஸ்தான புரோகிதர்களாக அமர்ந்த பிராமணர்கள், ராஜகுருக்களாக விளங்கி, தமது பூர்வ வைதீகத்தை விடுத்து, சைவம், வைணவம் சார்ந்ததும், மள்ளர்கள் வேத மதங்களான சைவ, வைணவத்தை ஆதரித்ததும் முக்கியக் காரணங்களாக அமைந்தன.

மிகப் பெரிய கோயிலைக் கட்டச் சொன்னார் ராஜ-ராஜனிடம், அவன் ஆசிரியரும் ராஜகுருவும் ஆன கருவூர் தேவர். இதன் காரணம், கோயில் மிகப் பெரிதாய் இருப்பதன் குறியீடு, மற்ற மதங்களைவிடவும் சைவம் பெரியது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தத்தான். வைணவத்துக்கும் இது பொருந்தும். இந்திரனின் பரம்பரையாகச் சொல்லிக்கொண்ட வேந்தர்கள், சிபியின் பரம்பரையாகச் சொல்லிக்கொண்டார்கள்.

தமிழரின் சமயம், வாழ்க்கையோடு இணைந்த, மிக இயல்பான மிக எளிமையான சமயம். வாதங்கள், தத்துவங்கள் இல்லாத மகிழ்ச்சி தரக்கூடிய சமயம். தமிழர்களே அடிப்படையில் இன்ப நாட்டம் உடையவர்கள். அன்பும், காதலும், மிக இயற்கையாக வெளிப்பட்ட சண்டையும், போரும், போருக்குப்பின் சமாதானமும் என்று மிகச் சாமான்ய, அதேசமயம் மிக எளிமையான சமூகம் இது.

மிகக் கடுமையான சண்டையும் மிகக் கடுமையான அன்பும் கொண்ட, தூய்மையான மனமும் இயற்கையாகிய வாழ்வும் கொண்ட மகத்தான இனம் தமிழினம். வடநாட்டிலிருந்து வந்த சமயங்களும் உள்நாட்டுச் சமயங்களும் அவர்கள் வாழ்க்கை என்ற குளத்தில் கல் வீசி அவர்கள் அமைதியக் கெடுத்தன.

என்றாலும் மள்ளர்கள் பலருக்கே அவர்கள் வரலாறு தெரியவில்லை. அவர்கள் விளைவித்த நெல் மணிகளின் குவியல்தான், ஒரு காலச்சக்கரத்தையே கட்டி எழுப்பியது. தமிழ்க் கலாசாரம், பண்பாடு என்று தமிழரின் பெருமைகளாகப் பேசப்படுவது எல்லாம் தமிழ் உழவர்களின் கலாசாரம்தான் என்பதே உண்மை. நெற்களம்தான் தமிழ்க் களம். நெல் என்பதே சொல்லும் ஆயிற்று. நீர் என்பதே நீர்மை ஆகி, அன்பாயிற்று. வரப்பு என்பதே வரம்பாகி, சட்டம் நீதி ஆயிற்று. விளைச்சல் என்பதே சமூக வளர்ச்சி என்று ஆயிற்று. உழப்பட்டதுக்கே நிலம் என்று பேர். உழப்படாதது வெறும் மண்தான். உழவர்களே சகல முன்னேற்றத்துக்கும் அச்சாணி.

சரித்திரம் தொடர்கிறது…

Advertisements

3 thoughts on “பிரபஞ்சன் எழுதிய எழுதப்படாத சரித்திரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s